12 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


12 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
x

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

கோட்டை ஈஸ்வரன் கோவில்

ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது கோட்டை ஈஸ்வரன் கோவில். திருத்தொண்டீசுவரர், ஆருத்ர கபாலீஸ்வரர் என்ற பெயர்களில் சிவபெருமான் இங்கு அழைக்கப்படுகிறார். வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஈஸ்வரன் கோவில் கி.பி.12 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.பி.1,177-ம் ஆண்டு தாராபுரத்தை தலைநகராக கொண்டு கொங்குசோழன் கரிகாலன் என்பவரது ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த கோவிலில் தமிழ் மாதமான மாசியில் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் சூரிய ஒளி மூலவர் மீது படும் வகையில் கட்டப்பட்டு இருப்பது சிறப்பு மிக்கது.

அதிசயம்

புராணங்களின் படி தேவலோகத்தை சேர்ந்த சிறுநல்லாள், பெருநல்லாள் ஆகிய 2 பேரும் இங்கு சிவபெருமானை பூஜை செய்து இந்திரன் பூமாரி பொழியச்செய்த இடமாக விளங்குகிறது.

தாண்டவன் என்ற நெசவுத்தொழிலாளி ஒரு முறை இரவில் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் குளிரில் வாடியதை கண்டு மனம்வாடி, தன்னிடம் இருந்த ஆடையை வழங்கினார். மறுநாள் அந்த ஆடை ஆலயத்தின் உள்ளே எழுந்தருளி உள்ள திருத்தொண்டீசுவரர் மீது போர்த்தப்பட்டு இருந்த அதிசயம் நிகழ்ந்த தலமாகவும் இது உள்ளது.

திருப்பணி

இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் திருப்பணிகள் நடந்து வந்தன. ராஜகோபுரம் கருவறை, விமானங்கள், அர்த்தமண்டபம், வெளிச்சுற்று மண்டபம் ஆகியவை திருப்பணி செய்யப்பட்டது. 12 ஜோதிர் லிங்கங்கள், 7 மாதாக்கள், ஐம்பூத மாதாக்கள் என தனித்தனியாக புதிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் முழுமையும் புதிதாக வண்ணங்கள் பூசப்பட்டு ஒளிவீசும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன. 4-ந் தேதி முதல் கால யாக பூஜைதொடங்கியது. 5-ந் தேதி 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தன. 6-ந் தேதி காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6-ம் கால யாக பூஜை நடந்தது. மாலையில் 7-ம் கால யாகபூஜை நடந்தது. இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார்.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மூல ஆலயம், ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10.35 மணிக்கு கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஏ.எஸ்.சபேச சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் அருகில் தயாராக நின்றனர். புனித நீர் கோபுரங்களுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டதும் சுற்றி உள்ள அனைத்து கோபுரங்களிலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது கோவிலை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று 'சிவ சிவா...' என்றும் 'மகாதேவா' என்றும் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பக்தர்கள் மீது கோபுரங்களில் இருந்து தீர்த்தம் தெளித்தனர். இதுபோல் நீர் தெளிப்பு கருவி மூலமும் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செங்குந்தர் மண்டபம், ஒட்டக்கூத்தர் மண்டபம், வணிக வைசியர் மண்டபம் ஆகிய 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஈரோடு டவுன் துணை போலீஸ் ஆனந்தகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காமராஜ் வீதி, திருவேங்கடசாமி வீதி, தெப்பக்குளம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட ஈஸ்வரன் கோவிலுக்கு வரும் அனைத்து ரோடுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெற உள்ளது.


Next Story