திருக்கார்த்திகையையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது; வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்
திருக்கார்த்திகையையொட்டி ஈரோட்டில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்.
திருக்கார்த்திகையையொட்டி ஈரோட்டில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்.
திருக்கார்த்திகை
திருக்கார்த்திகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மாலையில் வள்ளி, தெய்வானை சமேத வேலாயுதசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலின் அர்ச்சகர் சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கற்பூரம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு "கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா..." என்று பக்திகோஷம் முழங்க வழிபட்டனர். இதையடுத்து கோவிலின் முன்பு உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் கோவிலில் அகல் விளக்குகளை பெண்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
ஈஸ்வரன் கோவில்
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை திருக்கார்த்திகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், வாரணாம்பிகை அம்பாள் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவிலின் முன்பு உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு வசதியாக விளக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவிலின் அர்ச்சகர் தீபத்தை ஏற்றினார். அதன்பின்னர் கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி சாமியின் வீதிஉலா நடந்தது.
அகல் விளக்கு
திருக்கார்த்திகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றினார்கள். அப்போது வீடுகளுக்கு முன்பு அழகிய கோலமிட்டு அதில் அகல்விளக்கு ஏற்றி வைத்தனர். இதேபோல் அலுவலகங்கள், கடைகள், ஆஸ்பத்திரிகள் என பல்வேறு இடங்களில் உள்ள வாசல் படிக்கட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பலர் பட்டாசு வெடித்தும் திருக்கார்த்திகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.