விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம


விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம
x
திருப்பூர்


திருப்பூர் விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.

தேர்த்திருவிழா

திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு, திருவீதி உலா நடந்தது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

நேற்றுமுன்தினம் இரவு பூமி நீளாதேவி கனகவல்லி தாயார் சமேத வீரராகவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அனுமந்த வாகனத்தில் சீதா, லட்சுமணன் சமேத ராமசந்திரமூர்த்தி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேர் வடம் பிடித்தனர்

இதைத்தொடர்ந்து விஸ்வேஸ்வரர் கோவிலில் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று அதிகாலை வீரராகவ பெருமாள், விஸ்வேஸ்வரசாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்கள்.

திருத்தேரில் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் சோமஸ்கந்தராக பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மாலையில் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

திரளான பக்தர்கள் தரிசனம்

தேருக்கு முன்பு சிறிய தேரில் விநாயகர் செல்ல தொடர்ந்து சிவனடியார் கூட்டமைப்பினர் சிவகன வாத்தியங்கள் இசைத்தனர். பக்தர்கள் சிவாயநம, சிவாயநம கோஷம் எழுப்பியபடி வடம்பிடித்து இழுத்தனர். கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். பெண்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடிச்சென்றனர். சிறுவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், சுந்தரர் வேடமணிந்து சென்றனர்.

தேர்வலம் வரும் வீதிகளில் பல்வேறு அமைப்பினர் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட பானங்கள், இனிப்புகளை வழங்கினார்கள். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடந்ததும் தேரோட்ட வீதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. தேரோட்டம் நடந்தபோது பூமார்க்கெட் வீதி, அரிசிக்கடை வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) மாலை வீரராகவ பெருமாள் கோவில் தோராட்டம் நடைபெறுகிறது.


Next Story