கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் அரியலூர் பெருமாள் கோவிலில் உள்ள சன்னதியில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பாமா, ருக்மணியுடன் கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தமிழகத்திலேயே பெரிய தசாவதார மண்டபம் கொண்ட இந்த கோவில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு புல்லாங்குழலுடன் காட்சி அளித்தார். உற்சவரான கிருஷ்ணர் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமியை வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள், கோவில் வளாகத்தில் விளையாடினார்கள். சிலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் அரியலூர் பட்டுநூல்கார தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் புறப்பாடு நடந்தது.
தா.பழூர்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் கிருஷ்ணர் காலடியை வாசலில் இருந்து வீட்டிற்குள் வருவதுபோல் அரிசி மாவினால் கோலமிட்டு பூஜை அறையை அலங்கரித்து பூஜைகளில் ஈடுபட்டனர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடினர். தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ரோகினி நட்சத்திரத்தையொட்டி இன்று(சனிக்கிழமை) மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை உறியடி உற்சவம் நடைபெறுகிறது.