கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து- ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
இந்த கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தன் இரங்கலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.