கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கு: சடணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மறுத்த உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு அதிரடி
சரணடைந்த இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் என்ற நபரை அவரது தந்தை தண்டபாணி கடந்த மார்ச் 21-ந்தேதி சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதைத் தடுக்க வந்த சுபாஷின் பாட்டி கண்ணம்மாளும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சுபாஷின் மனைவி அனுசியா படுகாயமடைந்தார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த தண்டபாணியை போலிசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த நாகராஜ் மற்றும் முரளி ஆகிய 2 பேரும் சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கிருஷ்ணகிரி கோர்ட்டு மறுப்பு தெரிவித்து, காவல்துறையினரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து காவல்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான தண்டபாணியிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டதால், மற்ற இருவரிடம் விசாரணை நடத்த தேவையில்லை என சரணடைந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில், சரணடைந்தவர்களின் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைவதற்கு முன்பே அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், உத்தரவு பிறப்பிப்பதில் நீதிபதி காலதாமதம் செய்ததாகவும் வாதிடப்பட்டது. மேலும் குற்றத்தின் தன்மை கருதி மனு தாக்கல் செய்த அன்றே இந்த மனு மீது முடிவெடுத்திருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிருஷ்ணகிரி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.