அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பா.ஜனதா காரணம்- கே.எஸ்.அழகிரி


அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பா.ஜனதா காரணம்- கே.எஸ்.அழகிரி
x

அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பா.ஜனதா காரணம் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

தஞ்சாவூர்

அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பா.ஜனதா காரணம் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

கையோடு கைகோர்ப்போம்

நாடு முழுவதும் ராகுல்காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகளை மக்களிடம் பரப்பும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'கையோடு கை கோர்ப்போம்' என்ற நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தனால்புரத்தில் காங்கிரஸ் சார்பில் கையோடு கைகோர்ப்போம் நிகழ்ச்சி மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது.

விழாவுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மேயர் சரவணன், மாநகர தலைவர் மிர்சாவூதீன், வட்டார தலைவர் மணிசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துண்டு பிரசுரங்கள்

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்திற்கு மேலாக அ.தி.மு.க.வில் மாபெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் பா.ஜனதா தான்.

பா.ஜனதா சித்தாந்தம்

பா.ஜனதாவின் சித்தாந்தம் அருகில் இருப்பவர்களின் செயல்பாடுகளை முடக்குவது. இதுபோல்தான் மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அங்குள்ள கட்சிகளை வீழ்த்தினர். தமிழகத்திலும் அ.தி.மு.க.வை பா.ஜனதா வீழ்த்தும்.

மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஓட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் பெற்றுத்தந்தார். அதேபோல ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றியை பெற்றுத்தருவார். தமிழக இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி வரமாட்டார்.

இவ்வாறு அழகிரி கூறினார்.


Next Story