குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்


குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்
x

இருமாவட்ட விவசாயிகள் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் சட்டமன்ற மனுக்கள் குழுவுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்

சட்டமன்ற மனுக்கள் குழுவுக்கு மனு

தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு விரைவில் ஆய்வுக்காக வருகைதர உள்ளனர். இதையொட்டி நீண்டகாலம் தீர்க்கப்படாத பொதுவான பிரச்சினைகள் குறித்து குழுவுக்கு மனு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமசாமி, சட்டமன்ற மனுக்கள் குழுவுக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடகனாறு பிரச்சினை என்பது திண்டுக்கல், கரூர் ஆகிய இருமாவட்டங்களின் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகும். மரபுவழி குடகனாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டி ஆற்றை திசைமாற்றம் செய்ததால் ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர், அரவக்குறிச்சி தொகுதி மக்கள், விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்டது.

வல்லுனர் குழு அறிக்கை

இதன் எதிரொலியாக, குடகனாறு பிரச்சினையை தீர்க்க கடந்த 9.9.2020 அன்று தமிழக அரசு வல்லுனர் குழு அமைத்தது. அந்த வல்லுனர் குழுவின் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெங்கட்ராம அய்யங்கார் அணைக்கட்டு பாசன கால்வாயில், தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் செலவில் குடிமராமத்து செய்யப்பட்டது.

அதில் சுமார் 200 மீட்டர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. அந்த ஆக்கிரமிப்பு குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேபோல் லட்சுமணம்பட்டி அணைக்கட்டு பாசன கால்வாயில் ரூ.35 லட்சம் செலவில் குடிமராமத்து செய்யப்பட்டது. அதிலும் 150 மீட்டர் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இரு பாசன கால்வாய்களிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆற்றில் கழிவுகள்

மேலும் திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர், தோல் தொழிற்சாலை கழிவுகள், தாடிக்கொம்பு, அகரம், வேடசந்தூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் கழிவுகள், நூற்பாலைகளின் ரசாயன கழிவுகள் குடகனாற்றில் கலக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு, மீன்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

ரசாயன கழிவுகள் கலந்த தண்ணீரை தேக்கி வைப்பதால் குடகனாறு அணையின் இரும்பு ஷட்டர்கள் துருப்பிடித்து சேதமடைகின்றன. இதுகுறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து ஆற்றை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story