ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஆதீனங்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஆதீனங்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீரட்டேஸ்வரர் கோவில்
மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஞானாம்பிகை வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. தொடர்ந்து திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று குடமுழுக்கு நடந்தது.
நேற்று 6-ம் காலயாகசாலை பூஜை நடந்து, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் கடங்கள் புறப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானத்தை அடைந்தது. அங்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலை 9.40 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் மதுரை ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு
பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், கைலாசநாதர், சீதலா தேவி மாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாள், மன்மதன் சுவாமி மற்றும் கூந்தாலம்மன் ஆகிய 6 கோவில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு, யாக சாலை பூஜைகள் நடந்தது. அதையடுத்து ஒரே நேரத்தில் 6 கோவில்களில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ஞானவேலன், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி
பூம்புகார் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மகா மாரியம்மன் மற்றும் திருவெண்காடு அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி அருகே வடகால் ஊராட்சி அரண்மனை தெருவில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். பழமையான இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதில் செல்வ விநாயகர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.