கூடங்குளம் போராட்ட மோதல் வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


கூடங்குளம் போராட்ட மோதல் வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x

கூடங்குளம் ேபாராட்டத்தில் பங்கேற்காததால் ஏற்பட்ட மோதலில் மீனவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பெண்கள் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் சப்-கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை மீன்வாடி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 50), மீனவர்.

கூடங்குளம் போராட்டம்

கடந்த 2010-ம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பொதுமக்கள் இடிந்தகரையில் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அப்பகுதி மீனவர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் கிடைக்கும் வருவாயில் 10-ல் ஒரு பங்கை போராட்ட குழுவுக்கு கொடுத்தனர்.

ஆனால், இளங்கோ போராட்ட குழுவுக்கு பணம் கொடுக்காமலும், போராட்டத்தில் பங்கேற்காமலும் இருந்துள்ளார். இதுதொடர்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் இளங்கோவை போராட்டத்தில் பங்கேற்க அழைத்தனர். ஆனால், போராட்டத்தில் பங்கேற்காததால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்குமாறு கூறப்பட்டது.

மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

இந்த நிலையில் கடந்த 19-9-2013 அன்று இளங்கோ தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த சந்தான மொடுதகம் மகன் ஜோதி, ஜெயபால் மகன் ரோசாரி, மிடக்கா சந்தியாகு மகன் லூர்து மிக்கேல், அவருடைய மகன் போர்ஜின், அசாருதீன், ரோசாரி மகன்கள் ராபர்ட், சேகர், பிரவீன், கவுதம் மற்றும் ரமேஷ், அருண் மகன் கவுசானல், செல்வன் மகன் சீலன்,

சிங் மொடுதகம் மகள் சகாயம், ரோசாரி மனைவி ஞானப்பிரகாசி, ராபர்ட் மனைவி ஆஷா, சந்தானம் மொடுதகம் மகன் சிங், ரவி, லூர்து மிக்கேல் மனைவி ராணி, சந்தான மொடுதகம் மகள் சூர்யா ஆகிய 19 பேருக்கும், இளங்கோவுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி மோதல் ஏற்பட்டது. இதில் 19 பேரும் சேர்ந்து இளங்கோவை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கம்பு, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களாலும் தாக்கினர். இதனை தட்டி கேட்ட இளங்கோவின் உறவினரான பிரைட்டனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

7 ஆண்டு சிறை

இதில் படுகாயமடைந்த இளங்கோ, பிரைட்டன் ஆகிய 2 பேரும் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இளங்கோ, பிரைட்டன் ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், சுப.உதயகுமார் உள்ளிட்ட 22 பேர் மீது கூடங்குளம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் விசாரணை, வள்ளியூர் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பர்ஷாத் பேகம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், கூடங்குளம் அணு உலை போராட்ட எதிர்ப்பாளர்கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராணி இறந்து விட்டார். மீதமுள்ள 4 பெண்கள் உள்பட 18 பேர் மீது குற்றச்சாட்டு உறுதியானது. எனவே, அவர்களுக்கு 2 வழக்குகளிலும் சதி திட்டம் தீட்டியதற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.


Next Story