சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி - கே.எஸ்.அழகிரி


சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி - கே.எஸ்.அழகிரி
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரிப்பது என்ற முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருப்பதற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறையாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்தவேண்டும் என்பதில் கமல்ஹாசனுக்கு இருக்கிற தீவிரத்தன்மையை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

இந்திய நாடு இதுவரை காணாத வகையில் அரசமைப்பு சட்டமும், ஜனநாயக நிறுவனங்களும் அச்சுறுத்தப்படுகிற இக்கால கட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என்பதில் ராகுல்காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது.

சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் சார்பாகவும் மீண்டும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story