மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு


மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு  பாராட்டு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஆணையாளர் பிரதாப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி 69-வது வார்டு ராலிங்கம் காலனியில் மாநகராட்சி தொடக்க பள்ளி உள்ளது.

இங்கு கடந்த 2015-ம் ஆண்டு 30 மாணவர்கள் மட்டுமே படித்தனர்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை மாலா மற்றும் ஆசிரியர்கள் லோகநாதன், தேவநாயகி, பெல்சி மலர் உள்ளிட்டோர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் அந்த பள்ளியில் 125 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி கட்டிடத்தில் அழகிய வர்ணங்கள் தீட்டி அழகுப்படுத்தியது,

நமக்கு நாமே திட்டம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கணினி மூலம் கல்வி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.

இதுதவிர பள்ளி திறப்பின் போது மாணவ-மாணவிகளுக்கு டை, பெல்ட், சூ மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே இந்த பள்ளியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பள்ளியை நல்ல முறையில் பராமரித்து, சிறந்த கல்வி சூழலை ஏற்படுத்திய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.

மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் பிரதாப், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் மாநகராட்சி கல்வி அதிகாரி மரிய செல்வம் உடன் இருந்தார்.


Next Story