சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு


சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
x

சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வளரிளம் பெண்களுக்கு உதிரம் உயர்த்துவோம் திட்டத்திற்காக சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் பொக்கிஷம் திட்டத்தின் வாயிலாக தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தினை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறோம். வளர் இளம் பெண்களின் ரத்த சோகையினை சுமார் 17,000 பள்ளி பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அனுமதியோடு ரத்த மாதிரி எடுத்து அந்த ரத்த மாதிரியினை பகுப்பாய்வு செய்து ரத்த சோகையை கண்டறிந்து குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உதிரம் உயர்த்துவோம் திட்டத்திற்காக வளர்இளம் பெண்களின் ரத்த சோகை கண்டறியும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து இந்த திட்டத்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் சிறப்பாக பணி மேற்கொண்டு உள்ளீர்கள். மேலும் சுகாதார துறை அலுவலர்கள் வருங்காலங்களில் தாய் சேய் மரணத்தை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

தொடர்ந்து உதிரம் உயர்த்துவோம் திட்டத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 230 மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமாமணி துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story