வேகமாக நிரம்பி வரும் ரத்தினபுரி குளம்
நத்தக்காடையூர் அருகே கீழ் பவானி வாய்க்காலில் இருந்து வரும் உபரி நீரால் ரத்தினபுரி குளம் வேகமாக நிரம்பி வருகிறது.
ரத்தினபுரி குளம்
நத்தக்காடையூர் ஊராட்சி ரத்தினபுரி கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் மழை காலங்கள் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் இருந்து வரும் உபரி நீரால் நிரம்பும். இந்த குளம் நிரம்பினால் உபரி நீர் வெளியேறி குச்சிக்காட்டுப்பதி, கொக்குமடை, ஓடக்காடு, சந்தைப்பேட்டை, ஈஸ்வரன் கோவில் பகுதி வழியாக சென்று நொய்யல் ஆற்றில் கலக்கும்.
இந்த குளம் நிரம்பும் போது கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.. இதனால் குடிநீர் ஆதாரம் நன்கு பாதுகாக்கப்படும். இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையில் கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ரத்தினபுரி குளம் வேகமாக நிரம்பி வருகிறது.
குடிநீர் ஆதாரம்
இந்த குளம் கடந்த 5 நாட்களில் 2 அடிக்கு மேல் உயர்ந்து உள்ளது. பலத்த மழை பெய்தால் அதிக நீர்வரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரத்தினபுரி குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், கிராம பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.