குலசேகரன்பட்டினம் தசரா விழாவில்டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்குதல்; 2 பேர் கைது
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டீக்கடை நடத்திய பெண்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் காட்டுமொகதும் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அப்துல்காதர். இவருடைய மனைவி அமீனா உம்மாள் (வயது 39). இவர் விழாக்கள் நடைபெறும் ஊர்களில் தற்காலிக டீக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர், குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவையொட்டி, அங்குள்ள செய்யது சிராஜூதீன் பள்ளிவாசல் அருகில் தற்காலிக டீக்கடை அமைத்து இருந்தார்.
பெண்களை தாக்கிய கும்பல்
நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், அமீனா உம்மாளிடம் மாமூலாக பணம் கேட்டு தகராறு செய்து, அவரை தாக்கினர். மேலும் டீக்கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்தனர்.
இதனை தடுக்க முயன்ற அமீனா உம்மாளின் உறவினரான செய்யது அலி பாத்திமா என்ற பெண்ணையும் கும்பல் தாக்கி விட்டு தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த 2 பெண்களும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்து அமீனா உம்மாள் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், குலசேகரன்பட்டினம் மாடசாமிபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் முத்துராமன் (27), அவருடைய நண்பரான வல்லரசு (20) உள்ளிட்ட 7 பேர் கும்பல், பெண்களை தாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து முத்துராமன், வல்லரசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
---