குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி


குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி
x

குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடந்தது.

கரூர்

குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றில் இருந்து தினந்தோறும் காலை பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவ சாமிகளின் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலையில் உள்ள மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குளித்தலைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த சாமிக்கு குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் அருகே சந்திப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருஈங்கோய்மலை சாமி மற்றும் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் சுவாமிகள் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. தைபூசம்போல 2 கோவில்களின் அஸ்டதேவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினார்கள். பின்னர் நேற்று மாலை 2 கோவில் சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது. இதனைதொடர்ந்து 2 கோவில்களின் சாமிகளும் அந்தந்த கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story