கொடையூர் குங்கும காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கொடையூர் குங்கும காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குங்கும காளியம்மன் கோவில்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தாளப்பட்டி அருகே செங்காளி பாளையத்தில் பிரசித்தி பெற்ற கொடையூர் குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வ விநாயகர், மலையாள கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன் சுவாமி, தன்னாட்சியப்பன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் கொங்கு நாட்டின் பூர்வீக குடிமக்களான வேட்டுவ கவுண்டர், 24 மனை தெலுங்கு செட்டியார், மூலனூர் கோலவார் குலத்தைச் சேர்ந்த 5 தாய்மக்களின் குலதெய்வமாகும்.
இந்தகோவிலில் திருப்பணிகள் முடிந்து, சிற்ப சாஸ்திர முறைப்படி வர்ண வேலைப்பாடுகள் முடிவுற்ற நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 28-ந்தேதி கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து கொண்டு கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பு வைத்தனர். பின்னர் பக்தர்கள் அங்கிருந்து ஒன்றுகூடி தீர்த்தக்குடங்களுடன் யானை, குதிரை, ஒட்டகம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், செண்டா மேளம் ஆகியவற்றுடன் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக குங்கும காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்தனர்.
கும்பாபிஷேகம்
கடந்த 30-ந்தேதி காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அன்று மாலை முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. கடந்த 1-ந்தேதி பரிவாரம் மருந்து சாத்துதல், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் 2-ம் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 3-ம் கால பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 4-ம் கால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் குங்கும காளியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள்...
பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபராதனை நடந்தது. இதில், கும்பாபிஷேகத்தில் ஊர் பொதுமக்கள், கிராம பொதுமக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.