மூங்கில்துறைப்பட்டு அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மூங்கில்துறைப்பட்டு அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பாட்டு அருகே ஆதனூர் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த அக்கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை. முதல் கால யாகசாலை பூஜை, மகா சாந்தி அபிஷேகம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், தன பூஜை, மகாபூர்ணாகுதி, 3-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட ஹோமங்கள் நடந்து முடிந்தவுடன் கடம் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்குமேல் சக்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாட்டை விழா குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.