தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம்- பக்தர்கள் வரவேற்பு


தினத்தந்தி 13 Oct 2023 12:30 AM IST (Updated: 13 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

17 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.

தென்காசி

தென்காசியை ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியன் காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட எண்ணம் கொண்டார். மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக சென்று வழிபட செய்தார். இவ்வாறு காசிக்கு சென்று தினமும் வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான். இறைவன் மன்னனது கனவில் தோன்றி நான் இருக்குமிடத்தில் நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.

மறுநாள் எறும்புகள் சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதை கண்டு வணங்கினான். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசியில் கோவிலை கட்டு என்று ஆணையிட்டார்.

ராஜகோபுரம்

அதனை ஏற்று பராக்கிரம பாண்டியன் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டது தான் தென்காசி கோவில். இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. அந்த இடத்தில் கோவில், கோபுரம் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.

1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுர திருப்பணி முடிவடைந்தது.

17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் காசி விஸ்வநாதர், உலகம்மன், முருகன் தனித்தனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில் ராஜகோபுரம் தீ விபத்தில் சிதலமடைந்து காணப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

இதைத்தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் ராஜகோபுரம் கட்டுவதற்கு திருப்பணி குழு அமைக்கப்பட்டது. 25-11-1984 அன்று ராஜகோபுரம் கட்டும் பணி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் தொடங்கியது. 1990-ம் ஆண்டில் 180 அடி உயரத்தில் 9 நிலை அடுக்கில் கொண்ட மிகப்பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது.

இந்த ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதால் டாக்டர் பா.சிவந்தி அதித்தனாருக்கு இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சட்டசபையில் அறிவிப்பு

கும்பாபிஷேகம் நடத்தி 17 ஆண்டுகள் ஆவதால் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களும், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடாரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கூடுதலாக ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளார்.

பக்தர்கள் வரவேற்பு

கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்ற இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தென்காசி அருகே உள்ள இடைகால் துரைசாமிபுரத்தை சேர்ந்த சமுத்திரக்கனி:-

இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது தமிழக அரசு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். பொதுவாக கோவில் கும்பாபிஷேகம் நடத்தும்போது அந்த ஊருக்கு நல்ல ஒரு செழிப்பு கிடைக்கும். கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றிவிட்டு சிறந்த முறையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

தென்காசி ரெயில் நகரை சேர்ந்த செல்வகணேஷ்:-

தென்காசி கோவில் ராஜகோபுரம் சேதமடைந்த நிலையில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு அந்த கோபுரம் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டது.

தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story