அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
இடையபட்டி, தச்சமல்லி கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளியம்மன் கோவில்
விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி கிராமம், இடையபட்டியில் கணேசன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 9-ந்தேதி காலை ஊர் முக்கியஸ்தர்கள் காவிரியில் இருந்து கோவிலுக்கு புனித நீர் எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து காலை 9.15 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கணேசன், காளியம்மன் கோவில் மூலஸ்தான விமானங்களுக்கு எடுத்துச்சென்றனர்.
கும்பாபிஷேகம்
அங்கு வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் தரிசனத்திற்கு பின்னர் கணேசன், காளியம்மன் சன்னதியின் மூலஸ்தான விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை, மேலபச்சகுடி, இடையபட்டி, பாத்திமாநகர், கத்தலூர், வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் விழாவிற்கான ஏற்பாடுகளை இடையபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
ஆவுடையார்கோவில் அருகே தச்சமல்லி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதைதொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் மூலஸ்தான விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தச்சமல்லி கிராமமக்கள் செய்திருந்தனர்.
சன்னாசியார் கோவில்
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் சன்னாசியார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் 3 நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் குளமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மட்டுமின்றி பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.