காட்டு யானைகளை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது


காட்டு யானைகளை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது
x
தினத்தந்தி 3 Feb 2023 7:30 PM GMT (Updated: 3 Feb 2023 7:30 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:-

பாப்பாரப்பட்டி அருகே விவசாய பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டது. கால்நடை டாக்டர்களுடன், வனத்துறை தீவிர ஏற்பாடு செய்துள்ளது.

யானைகள் அட்டகாசம்

பாப்பாரப்பட்டி அருகே கடந்த 4 மாதங்களாக 2 காட்டுயானைகள் விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தும் வருகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன், ஆங்காங்கே விவசாய கூலி வேலைக்கு செல்பவர்களையும் தாக்குகின்றன.

பின்னர் பனைக்குளம், தொட்லாம்பட்டி ஏரிகளில் இறங்கி நீரில் குளிப்பதும், அங்குள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுமாக இருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வனத்துறையினரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்..

கும்கி யானை

இந்த நிலையில் நேற்று காலை ஆனைமலை பகுதியில் இருந்து 45 வயதுடைய கும்கி யானை ஒன்று பாப்பாரப்பட்டிக்கு வரவழைக்கப்பட்டது. கும்கி யானையை வைத்து காட்டு யானைகளை பிடிக்க பயிற்சி பெற்ற பாகன்கள் 2 பேர் உடன் வந்துள்ளனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் பாப்பாரப்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் காட்டுயானைகள் கிட்டம்பட்டி பகுதியில் இருந்து பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள சஞ்சீவராயன் மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளன. அவற்றை மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதற்கு ஏற்ற இடத்துக்கு கொண்டு சென்ற பின்னர் கால்நடை டாக்டர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தவும், பின்னர் கும்கி யானையை வைத்து வாகனத்தில் ஏற்றி உயிரியல் பூங்காவில் கொண்டு போய் விடுவது என்றும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story