குண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிலை திருட்டு
ஓமலூர் அருகே குண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் பட்டாபிஷேக சிலை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓமலூர்
வீர ஆஞ்சநேயர் சிலை
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே ஜோடுகுளியில் குண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் பழமையான ராமர்-சீதை, லட்சுமணன், அனுமன் உள்ள ராமர் பட்டாபிஷேக சிலைஇருந்தது.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பூசாரி ஜெய பிரகாஷ் (வயது 55) என்பவர் பூஜையை முடித்துவிட்டு கோவிலின் மூலஸ்தானத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு காவலாளி மகாராஜன் (60) கோவில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் படுத்து உறங்கி உள்ளார்.
காலையில் 5 மணி அளவில் எழுந்து பார்க்கும்போது மூலஸ்தானத்தில் உள்ள ராமர் பட்டாபிஷேக சிலை திருட்டு போனது தெரியவந்தது. இது பற்றி காருவள்ளி சின்ன திருப்பதி கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா பதிவு
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில், தலைக்கவசம் அணிந்து ஒருவரும், முக கவசம் அணிந்த ஒருவரும் கோவிலுக்குள் வந்து கருவறையின் பூட்டை திறந்து கருவறையில் இருந்த ராமர் பட்டாபிஷேக சிலையை எடுத்து ெசல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இந்த கேமரா பதிவை வைத்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் நள்ளிரவில் கோவிலின் பூட்டை திறந்து ராமர் பட்டாபிஷேக சிலையை எடுத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.