பெற்றோருடன் செல்ல குருத்திகா விருப்பம்- மதுரை ஐகோர்ட்டு


பெற்றோருடன் செல்ல குருத்திகா விருப்பம்- மதுரை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 13 Feb 2023 7:37 AM GMT (Updated: 13 Feb 2023 10:02 AM GMT)

நீதிமன்றத்தில் பெற்றோருடன் செல்ல குருத்திகா விருப்பம் தெரிவித்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியை சேர்ந்தவரும், குஜராத்தை பூர்வீகமாக கொண்டவருமான நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் படேல் தரப்பினர் வினித்தை தாக்கிவிட்டு குருத்திகாவை கடத்தி சென்றனர். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குருத்திகா வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர், தனது மனைவி குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதற்கிடையே, குஜராத்தில் மைத்ரிக் படேல் என்பவருடன் குருத்திகாவுக்கு திருமணம் நடந்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் குஜராத்தில் குருத்திகா இருப்பதை அறிந்த போலீசார் அவரை மீட்டு மதுரை ஐகோர்ட்டில் கடந்த 7-ந்தேதி ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குருத்திகாவை 2 நாட்கள் அரசு காப்பகத்தில் தங்கவைத்து எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வருகிற 13-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இதையடுத்து தென்காசி அருகே நன்னகரத்தில் உள்ள அரசு காப்பகத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

3 நாட்களுக்கு பிறகு குருத்திகாவை போலீசார் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சுனில் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அங்கு குருத்திகா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அப்போது போலீசார் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அறையின் ஜன்னல், கதவு அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. மதியம் 2 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் குருத்திகா வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தை பதிவு செய்து 'சீல்' வைத்து மதுரை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் வாக்குமூலத்தில் வினித்துடன் செல்வதாக கூறி உள்ளாரா? அல்லது ஏற்கனவே தன்னுடன் திருமணம் ஆகி விட்டதாக கூறி இருந்த மைத்ரிக் படேலுடன் செல்வதாக கூறி இருக்கிறாரா? அல்லது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளித்த பிறகு குருத்திகா போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நன்னகரம் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக குருத்திகா கோர்ட்டுக்கு வருவதை அறிந்ததும் அவரது உறவினர்கள், இருதரப்பு வக்கீல்கள் உள்ளிட்டோர் அங்கு வந்திருந்தனர்.

நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பெற்றோருடன் செல்ல கிருத்திகா விருப்பம் தெரிவித்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story