மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 1:01 AM IST (Updated: 13 Jun 2023 1:12 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

சேலம்

சேலம்

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை உயர்த்தவும், உழவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். அதன்மூலம் 2 ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை இல்லாத சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.50 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறை மூலமாக நிறைவேற்றி வருகிறோம். அதேபோல தொடர்ந்து 3-வது ஆண்டாக மேட்டூர் அணையை குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து வைத்துள்ளோம்.

தூர்வாரும் பணிகள்

குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது, கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டும். அதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக கடந்த 2021-ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், காவிரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி, குறுவை நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, நம்முடைய அரசு 61 கோடியே 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது. இதன் காரணமாக, காவிரி நதிநீர் கடைமடை பகுதி வரைக்கும் சென்று, கடந்த 2021-ம் ஆண்டு குறுவை பருவத்தில் 4.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், கடந்த 2022-ம் ஆண்டில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால், 19 நாட்கள் முன்னதாகவே, அதாவது மே 24-ந் தேதி அன்றே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

48 ஆண்டுகளில் இல்லாத...

19 நாட்கள் முன்னரே அணையை திறந்தாலும், அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களையும் தூர்வாருவதற்கு நீர்வளத்துறை ரூ.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. பணியின் தரம் குறித்து அனைத்து தரப்பு உழவர்களும் அப்போது மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டும் காவிரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடியே 12 லட்சம் செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை பருவத்திற்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்க்கடன் போன்ற இடுபொருட்களும் டெல்டா மாவட்ட உழவர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டன.

இதன் விளைவாக குறுவை நெல் சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சாதனையாக கடந்த ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரை கடந்து விவசாயம் நடைபெற்றது. 12.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. மேலும், சென்ற ஆண்டில் மேட்டூர் அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35 அடியாக உள்ளது.

தஞ்சாவூரில் ஆய்வு

எனவே மேட்டூர் அணையை குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி அன்று (நேற்று) திறப்பதற்கு நமது அரசு முடிவெடுத்தது. நீர்வளத்துறை கடந்த 2 ஆண்டுகளை போலவே, டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கோண்டது. இதற்கென நடப்பாண்டில் ரூ.90 கோடியை அரசு அனுமதித்து, இந்த பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிப்பதற்கு கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, முடுக்கி விடப்பட்டதால், இந்த பணிகள் எல்லாம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த பணியின் முன்னேற்றத்தினை நேரடியாக பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு நானும், நம்முடைய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தஞ்சாவூருக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டோம். மேலும், குறுவை நெல் சாகுபடி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து உழவர்களுடன் கலந்துரையாடி உரிய விவரங்களை கேட்டு அறிந்து கொண்டோம்.

அதன்படி, தற்போது குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான குறைந்த நாள் வயதுடைய நெல் ரக விதைகளும், ரசாயன உரங்களும், உயிர் உரங்களும் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, உழவர்களுக்கு உரிய காலத்தில் வினியோகிக்கப்பட்டன.

ரூ.75.95 கோடியில்

இதன் காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்தி இதுவரை 1.6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல்லில் நடவுப்பணி முடிவடைந்துள்ளது. மேலும் சமுதாய நாற்றங்கால் அமைத்து காவிரி நதிநீர் வந்தவுடன், நடவுப்பணியை உடனடியாக தொடங்கும் வகையில் பணிகள் விரைவாக வேளாண்மை துறையினால் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளேன்.

மேலும் பாசன நீரினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி இடுபொருட்களை தேவையான அளவு உபயோகித்து, நடப்பு குறுவை பருவத்தில் நெல் உற்பத்தியை உயர்த்த வேண்டும். நமது விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.75 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் நான் அறிவிக்கிறேன்.

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்-2023 என்ற இத்திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், 1.24 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், மாற்றுப்பயிர் சாகுபடிக்காக 15 ஆயிரத்து 818 ஏக்கருக்கு மாற்றுப்பயிர் சாகுபடித் தொகுப்பும் அளிக்கப்பட உள்ளன.

மேலும், 6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகளும், 747 பவர் டில்லர்களும், 15 பவர் வீடர்களும் மானியத்தில் வினியோகம் செய்வதற்காக, மொத்தம் ரூ.75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை நெல் சாகுபடி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக...

எனவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காவிரி டெல்டா உழவர்கள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி தேவையான அளவு ரசாயன உரங்களை உபயோகித்து, நெல் சாகுபடியை மேற்கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினால், நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க தி.மு.க. அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story