குறவர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் தனியாக சேர்க்க வேண்டும் - விஜயகாந்த்


குறவர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் தனியாக சேர்க்க வேண்டும் - விஜயகாந்த்
x

குறவர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் தனியாக சேர்க்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த வேல்முருகன் மலைக்குறவன் இனத்தை சேர்ந்தவர். சாதி சான்றிதழ் கேட்டு தமிழகம் முழுவதும் விண்ணப்பித்தும் தாங்கள் குறவர் இனம் என்பதால் வழங்கவில்லை என உயிரிழப்புக்கு முன் வேல்முருகன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் தனியாக சேர்க்கப்பட்டதை போன்று குறவர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் தனியாக சேர்க்க வேண்டும் என தேமுதிக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் இன்று ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. சாதி சான்றிதழ் வழங்க மறுத்த அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்த்தால்தான் சாதி சான்றிழ் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளும் குறவர் இன மக்களால் பெற முடியும். வேல்முருகனை போன்று அந்த இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் இனிமேல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க பழங்குடியினர் பட்டியலில் குறவர் இனத்தை சேர்க்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். மேலும் வேல்முருகன் தீக்குளிப்பு சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை எடுத்து கொண்டதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.

குறவர் இனத்திற்கு உரிய நீதி கிடைக்க நீதியரசர்கள் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த வேல்முருகனின் மகனுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கி, அவர் கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story