குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை

பருத்தி ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூறி குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குத்தாலம்:
பருத்தி ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூறி குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பருத்தி ஏலம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் பருத்தியை குத்தாலம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் மறைமுக பருத்தி ஏலம் நடந்தது. இதில் பருத்தியை விற்பனை செய்ய திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல பருத்தியை ஏலம் எடுக்க திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் 100 கிலோ கொண்ட மூட்டைக்கு 3 கிலோ வரை எடை குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் 100 கிலோவிற்கு ரூ.300 வரை இழப்பு ஏற்படுகிறது. 100 கிலோ மூட்டைக்கு ரூ.15 கேட்பதாகவும், பருத்தி ஏலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூறி விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் அங்கிருந்து சென்று மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






