தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது


வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து தராததால் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து தராததால் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது96). இவருக்கு சந்திரசேகரன் (58), ரவி (55), சோழன் (50) ஆகிய 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

இதில் விவசாய கூலி தொழிலாளியான சந்திரசேகரன், தந்தை கோவிந்தசாமி வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.

கோவிந்தசாமிக்கு அப்பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்து கொடுக்குமாறு தந்தையிடம் சந்திரசேகரன் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இதை தொடர்ந்து சொத்தை பிரித்து கொடுக்காததால்சந்திரசேகரன் 3 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன், தந்தை கோவிந்தசாமியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.

சொத்தை பிரித்து தராததால் மகன், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story