பெண்கள் ஒன்றாக நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா


பெண்கள் ஒன்றாக நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா
x
திருப்பூர்


இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவை அரசியல் கட்சி, இந்து அமைப்பினர் வீதிகள் தோறும் சிறிதும், பெரிதுமாக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடி வருகின்றனர். இதற்கு அதிக பொருட்செலவு தேவைப்படும் என்பதால் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக வீட்டில் இருக்கும் விநாயகர் படம், சிறிய சிலைகளை வைத்து பொதுமக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் திருப்பூர் முருகம்பாளையம் பாரக்காடு 1-வது, 2-வது வீதியில் வசிக்கும் மக்கள் புது முயற்சியாக தங்கள் வீதியில் இருப்போரிடம் பணம் திரட்டி ெபாதுமக்கள் பங்களிப்புடன் விழா நடத்தி வருகின்றனர்.

மும்மதத்தினர் ஆதரவு

இதுகுறித்து 6-வது ஆண்டாக விழா நடத்தும் 1-வது வீதி பெண்கள் கூறியதாவது:-

நாங்கள் எங்கள் வீதியில் உள்ளவர்களிடம் மட்டும் பணம் திரட்டி விழா நடத்தி வருகிறோம். வௌி நபர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை. முதல் வருடம் எங்கள் வீதியில் 1 அடியில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டோம். இப்போது 4 அடியில் விநாயகர் சிலை வைத்துள்ளோம். இங்கு வசிக்கும் பிற மதத்தினரும் தங்கள் பங்களிப்பு தொகையை தந்து மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொள்கின்றனர். சிலை கரைப்பதற்கும் 5 நாளுக்கு முன்பே இங்குள்ள சிறுவர்கள் காப்பு கட்டி தினமும் விநாயகருக்கு பூஜை செய்கின்றனர். தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து பெண்களும் ஆர்வத்துடனும், ஒற்றுமையுடனம் ஒவ்வொரு வேலைகளையும் செய்து கொள்கிறோம். இதேபோல் விநாயகருக்கு அவரவர் வீட்டில் செய்யும் பலகாரம், இனிப்புகளை படையல் வைத்து மகிழ்கின்றனர்.

கண்கள் கலங்கும்

தினமும் பெண்கள் ஒன்று கூடி முளைப்பாரி எடுத்து கும்மியடித்து விநாயகரை வழிபடுவோம். இதேபோல் விநாயகரை விட்டு அகல மனமின்றி இரவு நீண்ட நேரம் வீதியில் கூடியிருப்போம். நாங்கள் அவருக்கு துணை. அவர் எங்களுக்கு துணை. எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட நாங்கள் ஒன்றுகூடி நடத்தும் இந்த திருவிழா தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் விநாயகரை காலையும், மாலையும் எங்கள் வீட்டு பிள்ளையாக பாவித்து வழிபட்டு வரும் நிலையில் கடைசி நாளில் குளத்தில் கரைப்பதற்காக வாகனத்தில் ஏற்றும் போது அனைவருமே கண்கலங்கி விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். செல்போன், சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகம் என பல்வேறு விஷயங்களில் பெரும்பாலானோர் சிக்குண்டு இருக்கும் நிலையில் இவர்கள் ஒற்றுமையாக நடத்தி வரும் இந்த வழிபாடு பலரையும் அதிசயிக்க செய்து வருகிறது.


Next Story