திருச்செங்கோடு அருகேபழமையான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா ?பக்தர்கள் எதிர்பார்ப்பு


திருச்செங்கோடு அருகேபழமையான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா ?பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2023 7:00 PM GMT (Updated: 25 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு அருகே பழமையான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா ? என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாண்டீஸ்வரர் கோவில்

திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது குமரமங்கலம். இந்த ஊரில் பழமையான சுந்தரபாண்டீஸ்வரர், பங்கஜவல்லி அம்பாள் கோவில் உள்ளது. இது கொங்கு நாட்டில் சுந்தரபாண்டியர் என்னும் பாண்டிய மன்னன் கட்டிய பழமையான கோவில் ஆகும்.

இந்த கோவிலில் பல்வேறு இடங்களில் குறிப்பாக கொடி மர மண்டபத்தில் பாண்டிய அரசின் சின்னமான மீன் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. பங்கஜவல்லி அம்பாள் சன்னதியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமேனி கல் தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

தெப்பக்குளம்

இந்த கோவிலுக்கு நேர் எதிரே 4 புறங்களிலும் படித்துறையுடன் கூடிய தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் தனி மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் குளத்தை சுற்றி 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 63 விளக்கு மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் தெற்கு கரையில் வேலுடன் கூடிய முருகப்பெருமான் மற்றும் நாயன்மார்கள் சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளது.

இந்த தெப்பக்குளம் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நிரம்பியது. இருப்பினும் போதிய பராமரிப்பு இல்லாததால் குளத்தில் குப்பைகள் சூழ்ந்து முட்செடிகள் மற்றும் புதர்மண்டி அசுத்தமாக காட்சியளிக்கிறது. திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையினர் மார்கழி ஒன்றாம் நாள் இந்த பகுதியை சுத்தம் செய்து தெப்பக்குளத்தில் உள்ள மாடங்களில் நெய் தீபம் ஏற்றி, அகல் விளக்குகளை தெப்பக்குளத்தில் மிதக்க விடுவார்கள்.

அசுத்தம் அடைகிறது

அவ்வப்போது சிவனடியார்கள் உழவாரப்பணி செய்து தெப்பக்குளத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றினாலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை குளத்தை சுற்றி கூடும் சந்தை நேரத்தில் காய்கறி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் பெருகி மீண்டும் அசுத்தம் அடைகிறது.

இந்த குளத்தில் இருந்து பாண்டீஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கும் வகையில் குளத்து நீரை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து, விழாக்காலங்களில் உற்சவர் சிலைகள் வலம் வரும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும்படி தமிழக அரசு மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story