தொடர் மழை காரணமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணந்தூர் ஏரி நிரம்பியது கிடா வெட்டி, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்பு
தொடர் மழை காரணமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணந்தூர் ஏரி நிரம்பியது கிடா வெட்டி, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்பு
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெண்ணந்தூர் ஏரிக்கு அந்த பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மட்டுமே தேங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வெண்ணந்தூர் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து வெண்ணந்தூர் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதையடுத்து தற்போது வெண்ணந்தூர் ஏரி நிரம்பியது. கடந்த 2004-ம் ஆண்டுக்கு பின்னர் அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் நாச்சிப்பட்டி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏரி நிரம்பியதை கொண்டாடும் வகையில் நேற்று ஏரியில் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் நாச்சிப்பட்டி பாசனப்பகுதியில் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் மலர்களை தூவி வரவேற்றனர்.
இதேபோல் வெண்ணந்தூர் அருகே செம்மாண்டப்பட்டி ஏரியும் நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் கிடா வெட்டி பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் ஊராட்சிக்குட்பட்ட மின்னக்கல் சின்ன ஏரிக்கு ஓடை வழியாக தண்ணீர் வந்து தற்போது ஏரி நிரம்பியது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.