ஏரி நிரம்பி சாலை உடைந்து போக்குவரத்து பாதிப்பு: கல்யாணி பகுதியில் பாலம் அமைக்கப்படுமா?

ஏரி நிரம்பி சாலை உடைந்து போக்குவரத்து பாதிப்பு: கல்யாணி பகுதியில் பாலம் அமைக்கப்படுமா?
கல்யாணி பகுதியில் ஏரி நிரம்பி வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல சாலை உடைப்பால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஏரி நிரம்பியது
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்யாணி ஊராட்சி. இங்கு ஆண்டிக்காட்டான் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு குருசாமிபாளையத்தின் சுப்புசெட்டி ஏரி மற்றும் வால் ஏரி வழியாகவும், குருக்கபுரம் மற்றும் அணைபாளையம் ஏரிகளில் இருந்து சீதன வாய்க்கால் மூலம் வால் ஏரி வழியாகவும் தண்ணீர் வருவது வழக்கம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வால் ஏரி மற்றும் ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பியது. அப்போது அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் நொச்சிப்பட்டியில் இருந்து கல்யாணிக்கு செல்லும் சாலையில் கிழக்கு காட்டூர் பிரிவு ரோடு அருகே சாலையை கடந்து வாய்க்கால் மூலம் கருங்காட்டான் ஏரிக்கு செல்லும் நிலை இருந்தது. அப்போது காட்டூர் பிரிவு ரோடு அருகே இருந்த சாலை பள்ளமாக இருந்தது. இதனால் தண்ணீர் எளிதாக சாலையை கடந்து வாய்க்கால் வழியாக சென்று வந்தது.
போக்குவரத்து துண்டிப்பு
அதன் பின் பல ஆண்டுகளாக ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பவில்லை. மேலும் நொச்சிப்பட்டியில் இருந்து கல்யாணிக்கு செல்லும் சாலையும் புதுப்பிக்கப்பட்டு சாலை மேடாகிவிட்டது. இதனிடையே தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பியது.
மேலும் அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் சீதன வாய்க்கால் வழியாக சென்றது. ஆனால் காட்டூர் பிரிவு ரோடு அருகே சாலை மேடாக இருந்ததால், தண்ணீர் தேங்க தொடங்கி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றது. இதனால் விவசாய பயிர்கள்சேதமடையும் நிலை உருவானது. பின்னர் காட்டூர் பிரிவு ரோடு அருகே உள்ள கல்யாணிக்கு செல்லும் பிரதான சாலை உடைக்கப்பட்டு, தண்ணீர் சீதன வாய்க்கால் வழியாக கருங்காட்டான் ஏரிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதனால் நொச்சிப்பட்டியில் இருந்து கல்யாணி, எஸ்.நாட்டாமங்கலம் மற்றும் வையப்பமலக்கு செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேம்பாலம் வேண்டும்
அதன் காரணமாக பொதுமக்கள் மாற்று வழியில் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்கள் தடையின்றி போக்குவரத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக தண்ணீர் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வரும் காலங்களில் விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கவும், பொதுமக்கள் தடையின்றி போக்குவரத்தை மேற்கொள்ளவும் கல்யாணிக்கு செல்லும் சாலையில் கிழக்கு காட்டூர் பிரிவு அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரந்தர தீர்வு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழினியன்:- பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பியது. அப்போது கிழக்கு காட்டூர் பிரிவு ரோடு அருகே இருந்த கல்யாணி சாலை பள்ளமாக இருந்தது. அதனால் தண்ணீர் சாலையின் மீது சென்று வாய்க்கால் வழியாக கருங்காட்டான் ஏரிக்குச் சென்றது. ஆனால் அதன் பிறகு 2 முறை சாலை புதுப்பிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாக தற்போது சாலை மேடாகிவிட்டது. இந்த நிலையில் வால் ஏரி, குட்டை நிரம்பி வெளியேறிய தண்ணீர் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பின்னர் சாலை உடைக்கப்பட்டு தண்ணீர் வாய்க்காலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டது. முதல் கட்டமாக குழாய் பதித்து தண்ணீர் சாலையை கடக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் வருங்காலத்தில் அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் அது நிரந்தர தீர்வாக அமையும்.
விவசாய நிலங்கள்
கல்யாணி பகுதியை சேர்ந்த விவசாயி பாலுசாமி:- ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பி வெளியேறும் தண்ணீர் கருங்காட்டான் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது. ஆனால் கிழக்கு காட்டூர் ரோடு பிரிவு அருகே வாய்க்கால் வழிப்பாதையை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிக்காட்டான் குட்டை நிரம்பி வெளியேறிய தண்ணீர் வாய்க்காலில் செல்ல முடியாமல் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அதன் காரணமாக விவசாய பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டது. அதை தவிர்க்க தற்காலிகமாக சாலையை தண்ணீர் கடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வருங்காலத்தில் தடையின்றி தண்ணீர் செல்ல, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். அப்போது தான் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






