நகராட்சி குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நகராட்சி குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி நகராட்சி 26-வது வார்டில் புனரமைப்பு பணிகள் முடிந்து ஓராண்டு நிறைவடைந்தும் நகராட்சி குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

26-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகரின் தென்கிழக்கு பகுதியில் 26-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் எஸ்.வி. ரோடு, காந்தி நகர், ராஜா மெஷின் ரோடு, ஏ.கொல்லஅள்ளி ரோடு, சுண்ணாம்பு சூளை தெரு, பெருமாள் தெரு, கோதண்டன் தெரு, அண்ணாசாமி தெரு, சோழன் தெரு, வேடியப்பன் திட்டு ஆகிய 10 தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 1,058 ஆண் வாக்காளர்களும், 1,147 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,205 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வார்டில் சுமார் 100 தெரு விளக்குகளும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 11 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி தாலுகா அலுவலகம், சாலை விநாயகர் கோவில், சாய்பாபா கோவில், உதவி கலெக்டர் அலுவலகம், தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த வார்டில் பெரும்பாலான தெருக்கள் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குறுகலாக உள்ளன. ஏ.கொல்லஅள்ளி செல்லும் பிரதான சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நகராட்சி குளம்

இங்குள்ள நகராட்சி குண்ணன் குளம் பழமைவாய்ந்த குளமாகும். இந்த குளம் கடந்த ஓராண்டுக்கு முன்பு நகராட்சி சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக குளத்தை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. குளத்தில் யாரும் இறங்காமல் இருக்க தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்டு குளத்தை சுற்றி உள்ள சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டன.

ஆனால் இந்த குளத்திற்கு இவ்வளவு தொகை செலவு ஏன் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த புனரமைக்கப்பட்ட நகராட்சி குண்ணன் குளம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை. குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குளத்துக்கு தண்ணீர் வரும் பாதைகள் எவை என்றே தெரியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வார்டில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வினியோகம் செய்யப்பட்டாலும் மற்ற தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் கால்வாய் வசதி

ஏ.கொல்லஅள்ளி ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணபதி:-

நகராட்சி பகுதியிலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாக 26-வது வார்டு உள்ளது. ஏ.கொல்லஅள்ளி ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உருவாகியுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் குடியிருக்கும் இந்த பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எந்த பகுதியிலும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. சாலையிலேயே தண்ணீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், புதிதாக போடப்பட்ட சாலையும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் உள்ள புகார் சம்பந்தமான பதிவேட்டில் ஏதாவது குறைகள் எழுதி வைத்துவிட்டு வந்தால், 2 நாட்களுக்கு பிறகு எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் புகார் சம்பந்தமான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதாக பணியாளர்கள் எழுதி வைத்துவிட்டு செல்கிறார்கள். இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். வாகனங்களின் வேகத்தை குறைக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

வேடியப்பன் திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதேஷ்:-

26-வது வார்டுக்குட்பட்ட சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த பகுதியில் ஓடும் சனத்குமார் நதியில் தற்போது கழிவுநீர் தான் தேங்கியுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். நகராட்சி குண்ணன் குளம் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது. எதற்காக இந்த குளத்தை சீரமைத்தார்கள் என்றே தெரியவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த குளம் திறந்து விடப்படவில்லை என்றால் எதற்காக அந்த குளத்தை சுற்றி இருக்கைகள் அமைத்தார்கள். மேலும் இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் குப்பைகளை கொட்டி உள்ளனர். குளத்திற்கு இவ்வளவு செலவு செய்து பராமரிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

தெருவிளக்குகள்

எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அம்பிகா ராஜா:-

வேடியப்பன் திட்டு பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் போதுமான தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் போதுமான தெருவிளக்குகளை அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. சாக்கடைகள் முறையாக தூர்வாரப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வார வேண்டும். மேலும் இந்த பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story