அவசரகால தேவை என்று குடியிருப்பு வாசிகளிடம் நிலத்தை பறிப்பது தவறு


அவசரகால தேவை என்று குடியிருப்பு வாசிகளிடம் நிலத்தை பறிப்பது தவறு
x

தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரை


தஞ்சாவூரில் உள்ள விமான பயிற்சி மையத்திற்கு தேவையான நிலங்களை அரசு ஏற்கனவே கையகப்படுத்தி உள்ளது. அவ்வாறு கையகப்படுத்திய நிலங்கள் விமான பயிற்சி மையத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு நிலங்களை வழங்கியவர்கள், மாற்று நிலம் கேட்டிருந்தனர்.

இதற்காக இதே பகுதியில் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தி, அவர்களுக்கு வழங்குவது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் குடியிருப்பு பகுதி நிலத்தை கையகப்படுத்தும் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானவர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவசரகால தேவை என்ற அடிப்படையில் குடியிருப்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு. கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை அதே நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர்.

அதில், தஞ்சாவூரில் விமானப்படை பயிற்சி மையத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க, அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு.

அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து, நிலத்தை பறிப்பது தவறு. இதுதொடர்பாக கலெக்டரின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்கிறோம், என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story