தரைப்பாலம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி


தரைப்பாலம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
x

ஓசூர் அருகே கன மழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே கன மழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் ஓசூர் அருகே உள்ள திப்பாளம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் திப்பாளம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்புக்கு செல்ல கூடிய பிரதான தரைப்பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதன் காரணமாக அந்த பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் தவிப்பு

காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வீட்டில் இருந்து வெளியே வர சிரமப்பட்டனர். பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் அங்கு சென்று பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். மேலும் அந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். திப்பாளம் கிராமத்திற்கு செல்லும் சாலை வெள்ளநீரில் மூழ்கி, தண்ணீர் பெருக்கெடுத்தோடுவதால் கிராம மக்கள், தத்தளித்தவாறு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது

ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக, ஓசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குழந்தைகள் உள்பட 8 பேர் விடிய, விடிய வீட்டின் மொட்டை மாடியில் தங்கி அவதிப்பட்டனர்.

நீர்வழி பாதையை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தனியாருக்கு சொந்தமான அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள நீண்ட மதில் சுவரும் கன மழையால் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு திரும்பும் வழியில் பழமைவாய்ந்த புளிமரத்தின் பெரும்பகுதி சாலையில் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், துப்புரவு பணியாளர்கள் பொக்லைன், போலீசார் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அகற்றினா்.


Next Story