மழை இல்லாததால் தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்


மழை இல்லாததால் தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்
x

போதிய மழை இல்லாததால் விளைநிலங்கள் தரிசாக கிடக்கின்றன.

திருப்பூர்

தளி,

போதிய மழை இல்லாததால் விளைநிலங்கள் தரிசாக கிடக்கின்றன.

விளைநிலங்கள்

பருவமழை, கிணறு, ஆழ்குழாய்கிணறுகளை அடிப்படையாக கொண்டு மத்திய, குறுகிய கால பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் விவசாயம் சார்ந்த தொழிலிலும், உப தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பருவ மற்றும் தட்பவெட்ப நிலை மாறுபாடு, முறையற்ற நீர் மேலாண்மையால் விவசாய தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதுடன் கூலித்தொழிலாளர்களும் மாற்று வேலைகளுக்கு சென்று விட்டனர். இதனால் சாகுபடி பரப்பளவும் பரந்து விரிந்த நிலையில் இருந்து படிப்படியாக குறைந்து குறுகிய வட்டத்திற்குள் வந்து விட்டது.

இது குறித்து உடுமலை பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- உடுமலை பகுதியில் நீராதாரங்கள் நிரம்பி தடையில்லாமல் நடைபெற்று வந்த விவசாயம் இன்று பல்வேறு இடர்பாடுகளால் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதை மீட்டு கொண்டு வந்து அடுத்த தலைமுறை விவசாயிகளை உருவாக்க வேண்டும். அதன் எதிரொலியாக தான் இன்றைய தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு. நீராதாரங்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் மற்றும் முறையற்ற நீர் மேலாண்மை காரணமாக சாகுபடி பரப்பு குறைந்து வருவதை விலை உயர்வு தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டி அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்து உள்ளது.

நவடிக்கை

தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு கைகொடுக்க தவறிவிட்டது. இதனால் பசுமை போர்த்திய புல்வெளியாக காணப்பட வேண்டிய விளை நிலங்கள் வானம் பார்த்து பூமியாக வெறுமனே காட்சி அளித்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீராதாரங்களை தூர்வாரி பராமரித்து ஆறுகளை இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story