நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இறக்கி சாதனை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் பாராட்டு
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சி குழு கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் சரஸ்வதி அண்ணா, ஊராட்சி செயலர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டது. தொடர்ந்து இது நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து விக்ரம் லேண்டர் தரை இறங்கியது. உலகமே வியக்கும் வகையில் சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்
அரசு தற்போது நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ஊக்க ஊதியம் வழங்கி உள்ளது. இந்த ஊக்க ஊதியம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அரசு அவர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகளிலும் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் திட்ட பணிகளை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.