களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையில் மண் சரிவு


களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையில் மண் சரிவு
x
தினத்தந்தி 19 Jun 2023 7:39 PM GMT (Updated: 20 Jun 2023 7:13 AM GMT)

களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையில் மண் சரிவு

தஞ்சாவூர்

களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மண்சரிவு

பாபநாசம் தாலுகா கொத்தங்குடி அருகே களஞ்சேரி, பள்ளியக்ரகாரம் நெடுஞ்சாலையில் வெண்ணாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டியபோது திடீரென தார்சாலை உள்வாங்கியதால் 20 மீட்டர் தூரம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையின் பெரும்பகுதி துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுவர் அமைக்கும் பணியில் தொய்வு

தற்போது வெண்ணாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை சீரமைக்கும் பணியும் தாமதமாகி வருகிறது.

இந்த சாலையை பயன்படுத்தும் தென்னஞ்சோலை, காந்தாவனம், நிம்மேலி, கோவத்தகுடி, கொத்தங்குடி உள்பட பல கிராமமக்கள் தஞ்சைக்கு செல்வதற்கு 10 கிலோ மீட்டர் வரை வேறு வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மண்சரிவு ஏற்பட்ட களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story