கடந்த ஆண்டு 1,375 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மட்டும் 1,375 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மட்டும் 1,375 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
பிரேத பரிசோதனை
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். பல காரணங்களால் மரணம் அடைபவர்களின் உடல்கள் இங்குள்ள பிணவறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,375 உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களில் விபத்தில் உயிரிழந்தவர்கள் 293 பேரும், 281 பேர் விஷம் குடித்தும், 55 பேர் தீக்குளித்தும், 235 பேர் தூக்கு போட்டும் தற்கொலை செய்தவர்கள் ஆவர்.
தற்கொலை அதிகம்
மேலும் நீரில் மூழ்கி இறந்த 91 பேரின் உடல்களும், இயற்கை மரணம், பாம்பு கடித்து மரணம் உள்ளிட்ட காரணங்களால் இறந்தவர்களின் உடல்களும் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 1,209 உடல்களும், 2018-ம் ஆண்டு 1,342 உடல்களும், 2019-ம் ஆண்டு 1,352 உடல்களும், 2020-ம் ஆண்டு 1,111 உடல்களும், 2021-ம் ஆண்டு 1,322 உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களில் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர். எனவே தற்கொலைகள் அதிகரித்து இருப்பதால் மரண எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் படித்தவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். எனவே தற்கொலை எண்ணத்தை தடுக்க மன நல பயிற்சி கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.