மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நாளை இறுதி சடங்கு


மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நாளை இறுதி சடங்கு
x

கோப்புப்படம்

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நாளை சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு சரத்பாபு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. முள்ளும் மலரும் படத்தில் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' என்ற இவர் நடித்த பாடல் மிகவும் பிரபலமானது. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்போது அவரது உடலானது ஐதராபாத் மாஸ் அசோசியேசன் பிலிம் சாம்பரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சாலை மார்க்கமாக அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது.

நாளை காலை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை மாலை சென்னையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story