கால தாமதமாக வந்த விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கால தாமதமாக வந்த விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 55-க்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்லூரி காலை 9.20 மணிக்கு ஆரம்பித்து மாலை 2 மணி வரை பஸ் வசதியை முன்னிட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. அனைத்து விரிவுரையாளர்களும் வெளியூரில் இருந்து கல்லூரிக்கு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லாத காரணத்தினால் காலையில் குறித்த நேரத்திற்கு விரிவுரையாளர்கள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று 3 கவுரவ விரிவுரையாளர்கள் டால்மியாபுரம், கீழப்பலூர், அரியலூர் ஆகிய ஊர்களில் இருந்து அரியலூரில் இருந்து தொழுதூர் பஸ்சில் கல்லூரிக்கு வந்தனர். அப்போது சில நிமிடங்கள் கால தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் 3 விரிவுரையாளர்களுக்கும் வருகை பதிவேட்டில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 பாட வேலை நேரங்களிலும் தகவல் இல்லை என பதிவு செய்ததாகத் தெரிகிறது. இதனை அறிந்த காலதாமதமாக வந்த 3 விரிவுரையாளர்களும் எதிர்த்து கல்லூரி முதல்வரின் அறைக்கு முன்பு மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த கல்லூரி கல்வியல் இயக்குனர் 3 விரிவுரையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்ததன்பேரில் விரிவுரையாளர்கள் கலைந்து வீட்டுக்கு சென்றனர். இதனால் வேப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.