தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - வானதி சீனிவாசன்
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று பா.ஜ.க, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை,
பா.ஜ.க, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை, கோவை கோர்ட்டு வளாகத்தின் பின்பகுதியில் உள்ள கோபாலபுரத்தில், ஒரு கும்பல், வாலிபரை வெட்டி கொலை செய்துள்ளனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி உள்ளார்.
இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில், சரவணம்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கோவையில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் பதற வைக்கின்றன. தமிழகத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.