தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் உள் அனுமதி வாங்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் உள் அனுமதி வாங்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 சதவீதத்திற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி விமர்சித்துள்ளது.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 சதவீதத்திற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரம் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குவிகின்றனர்.

கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புச்சாரப் பணிகளிலும், பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக்காரர்களின் மாநிலமாகவோ, கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளிமாநிலத்தவர்கள் சென்று தங்க, அம்மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்ற கடந்த 9 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு லட்சக்கணக்கில் பல மடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி என்பதோடு, இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைத்து, தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். எனவே, வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டைகளை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story