ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிகஞர் கபில்சிபில், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்காததால் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் சட்டம் அமலில் இருப்பதாக தான் கருத வேண்டும். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் தான் அவரச சட்டம் காலாவதியாகும் என நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், அவரச சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதால், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதியில் இருந்து சில நாட்களுக்கு நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்ட பின் வழக்கு தொடருவதாக கூறி வழக்கை வாபஸ் பெற்றனர்.