வக்கீல்களுக்கு சேமநலநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு தலைவர் பேட்டி
ராசிபுரம்:
ராசிபுரத்தில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வக்கீல்கள் தாக்கப்படுவதும், கொடூரமாக கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரியில் ஒரு வக்கீலும், தூத்துக்குடியில் ஒரு வக்கீலும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தமிழக அரசு, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கறிஞர்களை கொலை செய்பவர்கள் மீது கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யாமல் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சேமநலநிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போது பொதுச்செயலாளர் காமராஜ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.