வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் மசோதாவை கண்டித்து நேற்று நாமக்கல்லில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

உண்ணாவிரத போராட்டம்

இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் மசோதாவை கண்டித்து நேற்று பல்வேறு இடங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் அய்யாவு, மண்டல குழு செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை தலைவர் சரவணராஜ், துணை செயலாளர்கள் தங்கதுரை, ரவி, துணை தலைவர் கணேசன், தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர் நல்லுசாமி மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி அளவில் நிறைவு பெற்றது.

நிறுத்தி வைக்க வேண்டும்

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது கூட்டமைப்பின் பொதுசெயலாளர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிற சட்ட திருத்தம், சட்ட விதிகளில் மாற்றம் என்பது தேவையில்லாத ஒன்று. இதை 15 மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மறைமுகமாக இந்திக்கு பெயர் மாற்றம் செய்வதாக உள்ளது. எனவே தமிழகம் இதை ஏற்றுக்கொள்ளாது. இது வக்கீல்களுக்கும், வக்கீல் தொழிலுக்கும் எதிரானது. எனவே மத்திய அரசு மசோதா அளவிலேயே நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story