வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு சார்பில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கு கூட்டமைப்பு துணைத்தலைவர் ஜாகீர்உசேன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் பரிமளம், பாலகணேசன், மரியகுழந்தை, மாவட்ட வக்கீல் சங்க செயலாளர் மணிகண்டன், துணை தலைவர் பாரதி முருகன், வக்கீல் ஜோதிமுருகன், ராஜசேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமார் 150-க்கும் அதிகமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேன்லி பிரபு கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். வக்கீல்கள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்படவில்லை. கோர்ட்டு வழக்கம் போல் இயங்கியது.