வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
3 சட்டங்களின் பெயர் மாற்றத்தை கண்டித்து கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கோவை
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயரை மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்து உள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வக்கீல்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பெயர் மாற்றத்தை கண்டித்தும், இதற்கான மசோதாக்களை திரும்ப பெற கோரியும், இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்த கூடாது என்று வலியுறுத்தியும் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஜாக் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் அருணாசலம், கோவை வக்கீல் சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் முத்துகிருஷ்ணன், கோயமுத்தூர் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் மருது பாண்டியன், மகளிர் சங்க துணை தலைவர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.