வக்கீல்கள் சாலை மறியல்


வக்கீல்கள் சாலை மறியல்
x

குழித்துறையில் சாலையை சீரமைக்கக்கோரி வக்கீல்கள் சாலை மறியல்

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குழித்துறை சந்திப்பில் இருந்து கோர்ட்டு வழியாக கழுவன்திட்டை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுபோல் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் மரணக் குழிகளாக காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என குழித்துறை வக்கீல்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று விளவங்கோடு தாலுகா அலுவலகம் சந்திப்பில் ஏராளமான வக்கீல்கள் திரண்டனர். அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் குழித்துறை வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பால்ஜி, இணைச் செயலாளர் பென்னட்ராஜ், பொருளாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சுரேஷ் பிரகாஷ், ஐடன் சோனி ஆகியோர் பேசினர்.போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பென்னட் ஸ்டீபன்சன், ரம்பால் சிங், விஜயகுமார், ரகு, ஷீலா ஜெயந்தி, மதன் குமார், வினோத், ஷைனி ஜோஸ், லைப்ரரியன் அனு குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு சாலைைய சீரமைக்க கோரி கோஷம் எழுப்பினர்.

இதையொட்டி அந்த பகுதியில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.போராட்டம் குறித்து தகவல் அறிந்த குழித்துறை நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு மாதத்தில் பணியை செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இதற்கிடைேய வக்கீல்களின் போராட்டத்தைெயாட்டி அந்த பகுதியில் 2 டெம்போவில் ஜல்லி இறக்கப்பட்டது. அத்துடன் குழித்துறை கோர்ட்டு அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே சாலையில் உள்ள பள்ளம் மண் போட்டு நிரப்பப்பட்டது. கடந்த மாதம் வாவுபலி பொருட்காட்சி நடந்த போதும் இதேபோல் சாலையில் ஜல்லியும், மண்ணும் போட்டு தற்காலிகமாக நிரப்பினர். ஆனால், ஓரிரு மழையில் அது அடித்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story