தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கோர்ட்டுகளில் இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய முறையை தொடர வலியுறுத்தியும் வக்கீல்கள் நேற்று தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதம்
கோர்ட்டுகளில் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தியும் தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக நேற்று கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டான்லி பிரபு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
கட்டமைப்பு வசதிகள்
போராட்டத்தில் வக்கீல்சங்க தலைவர் செங்குட்டுவன் பேசும் போது, கோர்ட்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இ-பைலிங் முறையை திரும்ப பெறவேண்டும். மேலும், இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய இணையதள வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தின் காரணமாக, இந்த இ-பைலிங் முறை சிவில் வழக்குகளுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வருகிற 15-ந் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் பேசினர். போராட்டத்தில் வக்கீல் சங்க செயலாளர் மார்க்ஸ், துணைத்தலைவர் செல்வின், மூத்த வக்கீல்கள் தனசேகர் டேவிட், சேகர், அதிசயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.