தர்மபுரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

இந்திய குற்றவியல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தலையிடக்கூடாது

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரும் குற்றவியல் சட்ட புதிய மசோதாவை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி தர்மபுரி வக்கீல் சங்கம் சார்பில் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் மாதேஷ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்திய குற்றவியல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசியல் அமைப்பு சட்ட சரத்து 348-க்கு எதிராக சட்ட திருத்தம் செய்யக்கூடாது. நீதித்துறையின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது.

கோஷங்கள்

வாக்கு வங்கி அரசியலுக்காக வக்கீல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சட்ட திருத்தம் என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இந்திய குற்றவியல் சட்டங்களை திருத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல்கள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story